Saturday, July 15, 2006

சூடு தணிச்சு யோசிங்க, சிரிங்க !

முகமூடியின் இந்தப் பதிவை வாசித்து, Calgary சிவாவின் வேண்டுகோளுக்கு செவி மடுத்ததின் விளைவாக, விளைந்தது இந்த தமிழாக்கப் பதிவு ! ஆங்கில மூலத்திற்கு முகமூடியின் பதிவைப் பார்க்கவும் ! இப்படி லிங்க் தருவதன் மூலம் முகமூடிக்கும் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள் இல்லையா ;-)


1. மெளனத்தை மேம்படுத்த வழியின்றிப் பேசாதே !

2. தவளைகள் தங்களை "BUG" செய்பவற்றை, எளிமையாகத் தின்று விடுகின்றன !

3. முட்டாள்தனம் ஒரு குறையல்ல ! வேறெங்காவது செல் !

4. சில நேரங்களில் நீ பூச்சி, சில நேரங்களில் நீ காற்றுத் தடுப்பான் (Windshield) !!!

5. உனக்கு உதவி செய்ய விருப்பம். எப்படி நீ உள்ளே நுழைந்தாய் ???

6. உன்னிடம் ஒன்று இருப்பதினாலேயே, அந்த ஒன்று இருப்பது போல் நீ நடந்து கொள்ளத் தேவையில்லை !

7. நான் "எவரும் இல்லை", அப்பழுக்கற்றவர் "எவரும் இல்லை", எனவே நான் அப்பழுக்கற்றவன் ! என்ன ஏதாவது புரியுதா :)

8. பாக்டீரியாவுக்கு ஆதரவு அளியுங்கள், சில மனிதர்கள் அதன் "Culture" க்கு மட்டுமே தகுதியானவர்கள் !

9. "எண்ணம்" என்று வரும்போது, சிலர் எங்கேயும், எதிலும் நிறுத்துவதில்லை !

10. அறிவுஜீவி: நீங்கள் மதிப்பு தராத பலப் பல விஷயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பவர்

11. "இல்லை" என்பதன் எந்தப் பகுதி உனக்கு விளங்கவில்லை ?

12. பன்றியுடன் மல்லுக் கட்டாதே ! நீங்கள் இருவருமே அசுத்தப்படுவீர்கள், ஆனால் பன்றிக்கு அதில் கொண்டாட்டமே :)

13. ஓரணியாக செயல்படுவது மிக அவசியம் -- இன்னொருவர் மேல் பழி போட அது அனுமதிப்பதால் !

14. சரியாக இலக்கை நோக்கிச் சுட வேண்டுமெனில், முதலில் சுடு, பின்னர் சுட்ட இடத்தை இலக்கு என்று கூறு !

15. நான் ஒரு நாளைக்கு ஒருவரை மட்டுமே மகிழ்விப்பேன். ஆனால், இன்று உன் நாளில்லை, நாளையும் தோதாகத் தோன்றவில்லை !!!

16. எலிப் பந்தயத்தில் (Rat-Race) பிரச்சினை என்னவென்றால், அதில் நீ வென்றாலும், நீ எலியாகவே கருதப்படுவாய் !

நன்றி: நண்பர் முகமூடி அவர்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, July 14, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 8-வது பதிவு

1. வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம் !

நடு இரவில் கண் விழித்த ஒரு பெண்மணி தன் கணவர் அருகில் இல்லாதது கண்டு அவரை வீட்டில் தேடியபோது, கணவர் சமையலறையில் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தார். கணவர் சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தோன்றினார். அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். துணுக்குற்ற மனைவி, "என்ன ஆச்சு, டார்லிங் ? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" என்று வினவினார். கணவர், மனைவியை நிமிர்ந்து பார்த்து, "20 வருடங்களுக்கு முன் நாமிருவரும் காதல் வயப்பட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? அப்போது உனக்கு 16 வயது தான் !". மனைவி, "நன்றாக நினைவிருக்கிறது" என்றார்.

இருவருக்குமிடையே சிறிய மௌனம் நிலவியது ! கணவரின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால், வார்த்தைகள் மெல்ல மெல்ல வெளிவந்தன, "உன்னுடைய அப்பாவிடம் நாம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் (மனைவியின் முகத்தில் இப்போது வெட்கம்!) மாட்டிக் கொண்டதும், முன்கோபியான அவர், நான் உடனே உன்னை திருமணம் செய்யாவிடில் என்னை 20 வருடங்கள் சிறையில் அடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது என்று துப்பாக்கி காட்டி மிரட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா ?" என்று கேட்டதும், மனைவி மிக மென்மையாக, "ஆமாம், செல்லம், ஞாபகம் வருகிறது" என்று பதிலுரைத்தார். கணவர் கண்களை துடைத்துக் கொண்டே, "இன்று நான் விடுதலை அடைந்திருப்பேன் !!!" என்று மிக்க கழிவிரக்கத்துடன் கூறினார் :)

2. வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் !

ஒரு கணவர் அலுவலகத்திலிருந்து தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து, "டார்லிங், நான் எனது மேலாளருடனும், அவருடைய நண்பர்களுடனும், கனடாவிற்கு ஒரு வார காலம் மீன் பிடி சுற்றுலா செல்ல வேண்டியுள்ளது ! நான் எதிர்பார்க்கும் பணி உயர்வைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக நிச்சயம் அமையும் ! பயணத்துக்குத் தேவையான துணிமணிகளையும், மீன்பிடி உபகரணப் பெட்டியையும் தயாராக எடுத்து வை. அலுவலகத்திலிருந்தே கிளம்ப வேண்டியிருப்பதால், செல்லும் வழியில், அவற்றை எடுத்துக் கொள்கிறேன். ஓ, ஒன்றை மறந்து விட்டேன். எனது நீல நிற பைஜாமாவை மறக்காமல் எடுத்து வை" என்று கூறினார்.

மனைவியும் பரபரப்பாக செயல்பட்டு, கணவரின் பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் பேக் செய்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார். ஒரு வாரம் கழித்து திரும்பிய கணவர், சற்று அயற்சியாகத் தெரிந்தாலும், உற்சாகமாகவே காணப்பட்டார். "என்ன, நிறைய மீன் பிடித்தீர்களா ?" என்று கேட்ட மனைவியிடம், கணவர், "ஆமாம், நிறையவே, வால மீன், விலாங்கு மீன், வஜ்ரம், விரால் -னுட்டு நிறையவே ! ஆனால், ஏன் நீ நான் கேட்ட நீல நிற பைஜாமாவை எடுத்து வைக்கல ? மறந்துட்டியா ?" என்றார். உடனே மனைவி, "இல்லையே, எடுத்து வைத்தேனே, உங்களுடைய மீன்பிடி உபகரணப் பெட்டியில் வைத்திருந்தேன் !!!" என்றவுடன், கணவர் எஸ்கேப் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, July 11, 2006

மும்பையில் மறுபடியும் ஒரு பயங்கரம் !

இன்று மாலை 6 - 6.30 PM, அதாவது 30 நிமிட நேரத்தில் மும்பையில் 7 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த தொடர் குண்டு வெடிப்பு மும்பையின் மேற்கு ரயில் (western railway) பாதையில் அமைந்துள்ள சந்திப்புகளில் நடந்துள்ளது. மாதுங்கா, மாஹிம், சாந்தாகுரூஸ், கார், ஜோகேஷ்வரி, பயந்தர், போரிவிலி ஆகிய இடங்களில் நடந்த இந்த கோர சம்பவத்தில் 40-50 பேர் உயிரிழந்துள்ளனர். எண்ணிக்கை அதிகரிக்கலாம் ! பலர் காயமடைந்துள்ளனர். NDTV-இல் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தில்லியிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் இன்டெலிஜன்ஸ் தகவல்கள், Lashkar-e-Toiba தீவிரவாதிகளே (தாவூதின் துணையோடு) இந்த படு பாதகச் செயலை நிறைவேற்றியதாக தெரிவிக்கின்றன. இந்த கொலைகாரர்கள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் மும்பையிலேயே தங்கி, திட்டமிட்டு இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. தீவிரவாதிகள் இதற்குத் தேவையான, பெரிய அளவிலான வெடி மருந்து பொருட்களை எவ்வாறு கடத்தி மும்பைக்கு எடுத்து வந்தார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி ! இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத் தவிர தற்போது வேறென்ன நாம் செய்ய இயலும் ? இந்த பயங்கரத்தைச் செய்த தீவிரவாத ஈனப்பிறவிகளை (இவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுவது, அவற்றுக்கு கேவலம்!) என்ன செய்தால் தகும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, July 09, 2006

திரு.வேணுகோபாலை ஏன் பிடிக்கும் ?

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. திரு.வேணுகோபால், உதவி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு அயராமல் முடிந்தவரை வேண்டியதை செய்து, அவர்களின் குறைகளை போக்கியிருக்கிறார். இனிமேலும், அவ்வாறே செய்வார் என்பது என் நம்பிக்கை .

2. திரு.வேணுகோபால் ஒரு நல்ல இசைக்கலைஞர் என்பது பலருக்கு தெரியாது. தன் இசையால் பலரையும் தன் வயப்படுத்துபவர் என்று அவர் நண்பர்கள் கூறுகிறார்கள்.

3. தன்னை நம்பி வந்த ஒரு பெண்மணிக்கு, ஒரு முறை மிகப்பெரிய உதவியை செய்தவர் திரு.வேணுகோபால். அத்தகைய உதவியை நானறிந்து யாரும் செய்ததில்லை !

4. அவருடைய சாதுர்யமும் (கொஞ்சம் சாணக்கியத்தனமும்) அவரைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரும்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

5. தன் சிறு வயதில், சிறந்த அறிவுள்ளவராகவும், தைரியசாலியாகவும் திகழ்ந்தார். ஆனால், அவரது அன்னை, வேணுகோபால் சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்திருப்பதாகக் கூறுகிறார். சிறுவயதில் குறும்புகள் சகஜம் தானே !

6. தன்னை நாடி வந்த புத்திசாலி மாணவன் ஒருவன், திரு.வேணுகோபாலின் செறிவு மிக்க வார்த்தைகளை கேட்டு, வாழ்வில் வெற்றியடைந்து, சிகரத்தைத் தொட்டதை மறக்க முடியுமா என்ன ?

7. திரு.வேணுகோபால் நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். தனது நண்பர் ஒருவருக்கு அவர் கேட்காமலேயே வேண்டிய உதவியை செய்து, நண்பரின் மனம் குளிர வைத்தவர்.

8. ஏன், பல அயல் நாட்டவர் கூட அவர் பால் ஈர்க்கப்பட்டு, திரு.வேணுகோபாலை தங்கள் தலைவராகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இத்தகைய நல்ல உள்ளமும் குணங்களும் கொண்ட திரு.வேணுகோபாலை, நானும் இன்னும் பலரும் விரும்புவதில் என்ன பெரிய ஆச்சரியம் இருக்க முடியும் ?? அவரிடம் பிடிக்காத ஒன்று என்று கூற வேண்டுமானால், சிறு வயதில் அவர் இளம்பெண்களை சற்று அதிகமாக நையாண்டி செய்திருப்பதை சுட்டிக் காட்டலாம் ! மற்றபடி, திரு.வேணுகோபால் ஓர் அசாதாரண பெர்சனாலிடி என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
*******************************





விஷ்ணுவின் அம்சமான, குழலூதும் கண்ணபிரானாகிய பகவான் வேணுகோபாலனை வெறுப்பவர் யாருமிலர் :)

பின் குறிப்பு: பதிவை மறுபடியும் வாசிக்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 பாயிண்ட்களின் விவரம் கீழே:

1. வேணுகோபால சுவாமி உலக ரக்ஷகர் !

2. புல்லாங்குழல் வாசிப்பவர் !

3. திரௌபதிக்கு அபயமளித்தவர் !

4. குருஷேத்திர யுத்த வெற்றிகளுக்கு உதவியவர் !

5. காளிங்கனை அடக்கியவர், வெண்ணெய் திருடியவர் !

6. பார்த்தனுக்கு கீதோபதேசம் செய்தவர் !

7. ஏழை சுதாமாவுக்கு உதவியவர் !

8. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க நாயகர் !

என்ன, நான் சொன்னதெல்லாம் சரி தானே, அடிக்க வர மாட்டீர்கள் என்ற சின்ன நம்பிக்கையில் தான், இப்படி ... ;-)

ஆக்கத்திற்கு ஊக்கம் : நண்பர் 'தமிழினி' முத்து அவர்கள் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, July 07, 2006

வேணுகோபால் என்ற மருத்துவர்

தன்னை பணியிலிருந்து நீக்கியதும், அதை சிறுமைப்படுத்தும் விதத்தில் செய்ததும் தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக (It is a lasting feeling of pain that hurts terribly!) Dr.வேணுகோபால் கூறியுள்ளார். அவர் பக்கத்து விளக்கத்தை எடுத்துக் கூற அவருக்கு வாய்ப்பளிக்காமல், அவரை பணி நீக்கம் செய்தது சரியான அணுகுமுறை இல்லை. அவரை நீக்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, அவரை அறைக்கு வெளியே காத்திருக்க வைத்தது அதை விடக் கொடுமை ! அமைச்சர், வேணுகோபாலுடன் AIIMS-இல் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசி, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி வகுத்திருக்கலாம் தான் ! ஆனால், நம்மூர் அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள் போல் தானே செயல்படுகிறார்கள் :-( அமைச்சர் தான் AIIMS-இன் தலைவர் என்பது உண்மை தான். ஆனால், அதை குடியரசுத் தலைவர் பதவி போல Advisory பதிவியாகத் தான் பார்க்க வேண்டும். முக்கியமாக, AIIMS போன்ற Autonomous கழகங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது மிக அவசியமாகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வாறு இருந்தது தான், AIIMS-இன் வளர்ச்சிக்கும் அதன் உலகளாவிய மதிப்புக்கும் காரணம் !

இப்போது Dr.வேணுகோபாலைப் பற்றி:

Dr.வேணுகோபால் உலகப் பிரசித்தி பெற்ற ஒர் இதய அறுவை சிகிச்சை நிபுணர். AIIMS-இல் 40 ஆண்டுகள் அவர் பணி புரிந்து பல நல்ல திட்டங்களை வகுத்து அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தம் தான் அவர் பணி வாழ்வில் ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். இதுவே சில அரசியல்வாதிகளை (முக்கியமாக அமைச்சரை) அவருக்கு எதிராக திருப்பி, அவர் மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட காரணமாய் அமைந்து விட்டது. அரசியல் சூழ்ச்சி விளையாட்டு குறித்து அவரின் அறியாமையே அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது ! கொஞ்சம் அரசியல் அறிவு / சூட்சமம் தெரிந்தவராக இருந்திருந்தால், அமைச்சருடன் சமரசம் செய்து கொண்டு போயிருப்பார் அல்லவா ? அவருக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் மேல் "ESMA" பாயலாம் என்று யாரோ அவரிடம் கூறியபோது, திரு.வேணுகோபால் "ESMA"வை ஆஸ்த்மா என்று புரிந்து கொண்டார் என்றால் பாருங்களேன் !

1996-இல் AIIMS டைரக்டராக அவரை நியமனம் செய்தபோது, அப்பதவியை முதலில் அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ! தனது 18 வயதிலிருந்து, 46 வருடங்கள் AIIMS-இல் தொடர்ந்து சேவை செய்த ஒரு புகழ் பெற்ற மருத்துவரை நேற்று முளைத்த காளான்கள் மோசமான முறையில் தூக்கி எறிந்திருப்பது வருந்தத்தக்கதே. படித்த காலத்தில், பிரதமர் நேருவிடமிருந்து, சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் வாங்கியவர் திரு.வேணுகோபால். மருத்துவப் பட்ட மேற்படிப்பிலும் தங்கப் பதக்கம் வாங்கியவர். பெருமை வாய்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டென்டன் கூலியிடம் (Denton Cooley) பயிற்சி பெற்றவர். அதைத் தொடர்ந்து, 1974-இல் AIIMS-இல் இதய அறுவை சிகிச்சைத் (open heart surgery) துறையை நிறுவி, நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பயிற்றுவித்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 62000 இதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளவர் திரு. வேணுகோபால் ! இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்கும் உரியவர் திரு.வேணுகோபால் ! 1998-இல் அவரது அயராத மருத்துவ சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்றவர் திரு.வேணுகோபால்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, July 05, 2006

அப்பாடா, ஜெர்மனி தோற்றது !

நான் மிக மிக எதிர்பார்த்தது போலவே நேற்று இரவு நடைபெற்ற கால் பந்தாட்டத்தில் ஜெர்மனி இத்தாலியிடம் தோற்றுப் போனது ! அதே போல, தொடக்கத்திலிருந்தே முக்கி முக்கி ஆடிய பிரேசில் பிரான்ஸிடம் தோற்றதும் ஓரளவு எதிர்பார்த்தது தான் ! கால் இறுதியில் நடந்த மாதிரி, ஆட்டத்தை எப்பாடு பட்டாவது Penalty shoot out-க்கு இட்டுச் சென்று, அர்ஜெண்டினாவை வீழ்த்தியது போல இத்தாலியையும் வீழ்த்தி விடலாம் என்ற ஜெர்மானிய எண்ணத்தில் மண் !

மிகச்சிறப்பாக ஆடிய இத்தாலி அணி, எக்ஸ்ட்ரா வேளியின் கடைசி மூன்று நிமிடங்களில் இரண்டு அருமையான கோல்கள் போட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பிரான்ஸ¤ம் இன்று போர்ச்சுகலை வென்று, இத்தாலியுடன் இறுதி ஆட்டத்தில் மோதினால், ஒரு மின்சாரப் பாய்ச்சி (ELECTRIFYING ;-)) ஆட்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இத்தாலியோ, பிரான்ஸோ யார் கோப்பையை வென்றாலும் மகிழ்ச்சியே !!!

ஜெர்மனி ஓரளவு திறமையாக ஆடினாலும், அவ்வணியின் ஆட்டம் பார்ப்பதற்கு ரசிக்கத் தக்கதாக இருப்பதில்லை. ஒரு "Set Pattern" வகை ஆட்டத்தையே தொடர்ந்து விளையாடியும், துளியும் கற்பனை இல்லா (Unimaginative) ஆட்ட யுக்தியை கடைபிடித்தும் வந்ததே, ஜெர்மன் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் என்பது என் கருத்து.உலக கால்பந்து போட்டிகளில் இத்தாலி ஜெர்மனியிடம் ஒரு முறை கூட தோற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஜெர்மனி ஓரளவு (மற்ற ஆட்டங்களை விடவும்) நன்றாகவே விளையாடியது. பெர்ட் ஸ்னைடர் இரு முறை, கோல் போடும் எளிமையான வாய்ப்புகளை நழுவ விட்டார் ! எக்ஸ்ட்ரா வேளியின் 27-வது நிமிடத்தில் கென்னாரோ கடூஸோ பிரமிக்கத்தக்க வகையில், கடினமான ஒரு கோணத்திலிருந்து, பந்தை இடது காலால் உதைக்க, சுழன்று சென்ற பந்து கோல் கம்பத்துக்கு வெளியே செல்வது போல் ஒரு பாவ்லா காட்டி விட்டு, கோல் போஸ்ட்டுக்கு உள்ளே இடது புற மேல் மூலையில் தஞ்சமடைந்ததும், ஜெர்மானியப் பார்வையாளர்களிடையே பேச்சு மூச்சில்லா ஒரு மயான அமைதி குடி புகுந்தது (ரொம்பப் பெரிய வாக்கியமோ :))

இத்தாலியர்களோ களிப்பின் உச்சத்தில் மிதந்தனர் ! ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், ஒரு திறமையான PASS வாயிலாக வந்த பந்தை, டெல் பியரோ கோலடித்து "Execution of Germany"யை துல்லியமாக நிறைவு செய்தார் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 01, 2006

டோண்டு, ஜீவாவின் 'ஆறுக்கான' அழைப்பு !

தலைப்பில் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, இப்பதிவு ! கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றிலிருந்து ஒன்பது வரை, பிடித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன் !

ஒன்று:
மருத்துவ மாணவி கௌசல்யாவுக்கு (வலைப்பதிவு நண்பர்களின் ஆதரவோடு) உதவி செய்ய முடிந்ததையே, வலைப்பதிவு ஆரம்பித்து, தமிழ்மணத்தில் என்னை இணைத்துக் கொண்டு எழுதியதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய பயனாக / மன நிறைவாகக் கருதுகிறேன்.

இரண்டு:
வலை பதிய முதல் ஊக்கம் தந்த இருவர் தேசிகன் மற்றும் காசி
(நண்பர்கள் சிங்கை அன்பு, சந்திரவதனா, யளனகபக கண்ணன் ஆகியோரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

மூன்று:
என்னை வலை நண்பர்களிடையே சற்று பிரபலம் ஆக்கிய விஷயங்களாக நினைப்பது
1. பல்லவியும் சரணமும் பதிவுகள் (மொத்தம் 32 !)
2. சிறுவயது சிந்தனைகள் பதிவுகள் (மொத்தம் 8)
3. GCT கல்லூரி வாழ்க்கை பற்றிய பதிவுகள் (மொத்தம் 5)


(உஷாவின் உத்தரவுப்படி (மன்னிக்கவும்! வேண்டுகோளுக்கு இணங்க ) வாசகர் விருப்பமாக புதியவர்கள் படிப்பதற்காக, மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! சேர்க்கப்பட்டுள்ளது !

நான்கு:
படித்ததில் பிடித்தவை
1. சுஜாதாவின் எழுத்துக்கள்
2. கலீல் கிப்ரான் கவிதைகள்
3. ஜெ·ப்ரி ஆர்ச்சர் - எல்லா நாவல்களும்
4. பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்கள்


ஐந்து:
"Controversy" பதிவர்கள் - THY Names are
1. முகமூடி
2. குழலி
3. டோண்டு ராகவன்
4. தமிழினி முத்து
5. மாயவரத்தான்

(இருந்தாலும் இவர்களின் பதிவுகள் ரசிக்கத் தக்கவை !)

ஆறு:
பல முறை அனுபவித்துப் பார்த்த தமிழ் திரைப்படங்கள்
1. காதலிக்க நேரமில்லை'
2. ஊட்டி வரை உறவு
3. தில்லுமுல்லு
4. அந்த ஏழு நாட்கள்
5. முள்ளும் மலரும்
6. அன்பே சிவம்

ஏழு:
பிடித்த வலைப்பதிவர்கள் (Not in any particular order :) )
1. தேசிகன்
2. ஐகாரஸ் பிரகாஷ்
3. ரஜினி ராம்கி
4. பெனாத்தல்கள் சுரேஷ்
5. ரோசா வசந்த்
6. யளனகபக கண்ணன்
7. மாண்ட்ரீசர் (முழுசா எதுவும் புரியாவிட்டாலும் கூட ;) )

(அருண் வைத்தியநாதனையும், PK சிவகுமாரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

எட்டு:
பிடித்த எட்டு தமிழ்ப் பாடல்கள்
1. குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
3. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
4. மலரே குறிஞ்சி மலரே
5. பூஜைக்கு வந்த மலரே வா, பூமிக்கு வந்த நிலவே வா
6. தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
7. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
8. காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா


ஒன்பது:
பார்க்க விரும்பும் இடங்கள்
1. ஹவாயி தீவுகள்
2. வெஸ்ட் இண்டீஸ் (2007 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு போகலாம்னு மனசுலே ஒரு எண்ணம் இருக்கு, பார்க்கலாம்!)
3. நயாகரா (இது நீருக்கு வீழ்ச்சியல்லவே, எழுச்சி அல்லவா என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது !)
4. மொரீஷியஸ்
5. நியுசிலாந்து
6. மசை மாரா (ஆப்பிரிகா)
7. குலு மணாலி
8. டார்ஜிலிங்க்
9. வைணவ திவ்ய தேசங்கள் (106-இல் எவ்வளவு இயலுமோ !)


என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் II - பதிவு 7

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா ...

2 அது காலங்கள் மாறினும் மாறாதது....

3. கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் ...

4. சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை ...

5. தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை ...

6. மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று ...

7. அன்று சொன்ன வார்த்தை அலை போல ...

8. அவள் நிலை நீ உணர மாட்டாயோ...

9. தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன் ...

10. சின்னாளம்பட்டியிலே கண்டாங்கி எடுத்து ...

11. கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தின் கோலங்கள்...

12. மடி மீது விளையாடும் சேயாக ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails